இந்திய அணிக்கு எதிரான தொடரில், தங்கள் அணியின் பலம் வாய்ந்த வேகப் பந்துவீச்சு வெற்றிக்கு வழி வகுக்கும் என்று தென் ஆப்ரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து ஜோகன்னஸ்பர்கில் அவர் கூறியதாவது: இந்திய அணியின் பேட்டிங் தற்போது மிக வலுவாக உள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக நடந்த போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினர். அதே சமயம், இந்திய மைதானங்கள் அளவில் சற்று சிறியவை. அதனால், பவுண்டரி சிக்சர் அடிப்பது எளிது என்பதுடன் வேகப் பந்துவீச்சும் அங்கு அவ்வளவாக எடுபடாது.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டால், தென் ஆப்ரிக்க மண்ணில் அவர்கள் அவ்வளவு எளிதாக ரன் குவித்துவிட முடியாது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதே சமயம், அவர்களைக் குறைத்து மதிப்பிடவும் விரும்பவில்லை. எங்கள் அணியின் முக்கிய பலம் வேகப் பந்துவீச்சு தான். ஸ்டெய்ன் விளையாடாத போட்டிகளிலும் கூட பிலேண்டர், மார்னி மார்க்கெல், ரியான் மெக்லாரன், வேய்ன் பார்னெல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்திய பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்த எங்களால் முடியும் என நம்புகிறேன். ஐபிஎல் போட்டியில் விளையாடி உள்ளதால் கோஹ்லி, தவான், ரோகித், டோனி ஆகியோரின் பலம், பலவீனம் பற்றி நன்கு அறிந்துள்ளோம்.
அதற்கு ஏற்ப வியூகம் அமைத்து நெருக்கடி கொடுப்போம். பாகிஸ்தான் தொடரில் எங்கள் பேட்ஸ்மேன்கள் அவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்திய தொடரில் தவறுகளை திருத்திக் கொண்டு அதிக ரன் குவிக்க முயற்சிப்போம்.
0 comments:
Post a Comment