இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும், இந்திய அளவில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து கவுரவித்து வருகிறது. இதன்படி 2012-13-ம் ஆண்டுக்கான விருது பட்டியலை கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.
இதில் பாலி உம்ரிகர் விருதுக்கு சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுக்குரிய காலக்கட்டத்தில்(2012 அக்டோபர் 1 முதல் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை) அஸ்வின் 43 டெஸ்ட் விக்கெட்டுகளும் (8 டெஸ்ட்), 263 ரன்களும் எடுத்துள்ளார்.
இதே போல் ஒரு நாள் போட்டியில் 24 விக்கெட்டுகளும், 20 ஓவர்போட்டியில் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். அது மட்டுமின்றி 80 ஆண்டு கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கடந்த இந்தியர் என்ற சாதனையும் இந்த காலக்கட்டத்தில் அவர் படைத்திருந்தார். அவருக்கு பாலி உமர்ரிகர் விருதுடன் ரூ.5 லட்சம் காசோலையும் வழங்கப்படும். இந்த விருதை ஏற்கனவே சச்சின் தெண்டுல்கர் (2 முறை), ஷேவாக், கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட், விராட் கோலி பெற்றிருக்கிறார்கள்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரருக்கு வழங்கப்படும் திலிப் சர்தேசாய் விருதை ரோகித் ஷர்மா (ரூ.5 லட்சம் பரிசு), ரஞ்சி கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டராக ஜொலித்த அபிஷேக் நாயர் லாலா அமர்நாத் விருதையும் (ரூ.2½ லட்சம்) பெறுகிறார்கள்.
சிறந்த வீராங்கனைக்கான எம்.ஏ.சிதம்பரம் விருதை தமிழகத்தை சேர்ந்த திருஷ்காமினி வாங்குகிறார். அவருக்கு விருதுடன் ரூ.50 ஆயிரம் கிடைக்கும். இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக முன்னாள் வீரர்கள் ஆர்.ஜி. பாபு நட்கர்னி, பரூக் என்ஜினீயர், மறைந்த ஏக்நாத் சோல்கர் ஆகியோருக்கு நினைவுப்பரிசுடன் தலா ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது. வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதுக்கு கபில்தேவின் பெயர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment