உலகநாடுகளின் கூட்டுமுயற்சியால் 100 பில்லியன் டாலர் மதிப்பில் பூமியிலிருந்து 250 மைல் தொலைவில் சர்வதேச விண்வெளிமையம் நிறுவப்பட்டுள்ளது. பூமியைப் பற்றிய பல்வேறு அரிய தகவல்களைப் பெற இந்த நிலையம் உதவிகரமாகச் செயல்பட்டு வருகின்றது.
கடந்த 11 ஆம் தேதி இந்த விண்வெளிநிலையத்தில் உள்ள குளிர்ச்சியூட்டும் குழாய் ஒன்றில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கணினித் தொழில் நுட்பமுறைகளைப் பயன்படுத்தி அங்கு வெளியேறும் அம்மோனியா வாயுவினை கட்டுப்படுத்த நாசா விஞ்ஞானிகள் முயன்றனர். இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. சூரியக்கதிர்களால் பாதிப்பு எதுவும் ஏற்படுவதற்குமுன் இந்தக் கோளாறை சரிசெய்யவேண்டி விண்வெளிவீரர்கள் விண்ணில் நடந்துசென்று அங்கு மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருக்கும் மூன்று உபரி குழாய்களிலிருந்து ஒன்றை இதில் பொறுத்தலாம் என்று நாசா முடிவு செய்தது.
இதன்படி சனிக்கிழமை அன்று ரிக் மஸ்ட்ராச்சியோ, மைக் ஹாப்கின்ஸ் ஆகிய இரண்டு வீரர்களும் விண்ணில் நடந்துசென்று செயலிழந்த குழாயினை நீக்கினர். இன்று மீண்டும் அவர்கள் விண்வெளியில் சென்று புதிய குழாயினைப் பொருத்தும் பணியில் ஈடுபடுவர் என்று விண்வெளிநிலைய நிர்வாக இயக்குனரான ஜட் ஃபிரிலிங் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இன்றைய முயற்சி வெற்றிகரமாக நடைபெறுமேயானால் அவர்கள் மூன்றாவது முறையாக விண்ணில் நடப்பதற்கு தேவையிருக்காது என்று நாசா கருதுகின்றது. இன்று நடைபெறவிருக்கும் பணியில் எங்களது முக்கிய நோக்கம் நிறைவேறும் என்பது தெளிவாக உள்ளதாக ஃபிரிலிங் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment