சினிமாவில் பொதுவாக ஒரு ஹீரோவின் அந்தஸ்து என்பது அவரது படங்கள் குவிக்கிற வசூலைப் பொறுத்துதான். குறிப்பாக படத்துக்கான ஓபனிங். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்றும் முதலிடத்தில் இருக்கிறார்.. என்றாலும் கடந்த இரு ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனவே இந்த ஆண்டு வெளியான படங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு 2013-ன் டாப் பாக்ஸ் ஆபீஸ் நாயகர்களைப் பட்டியலிடலாம்.
தமிழ் சினிமாவின் 30 ஆண்டுகளாக பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் எத்தனை நட்சத்திரங்கள் வந்தாலும் போனாலும், ரஜினிக்கு அடுத்த இரண்டாவது இடம் கமல் ஹாஸனுக்கே. அவ்வப்போது பரீட்சார்த்த முயற்சிகளைத் தொடர்ந்தாலும், வசூல் குவிக்கும் படங்களைத் தரும் விஷயத்திலும் அவர் கவனமாகவே இருக்கிறார். இந்த ஆண்டு பல்வேறு சர்ச்சைகள், மோசமான விமர்சனங்களைத் தாண்டி கமல் வெளியிட்ட விஸ்வரூபம் படம் நல்ல ஆரம்பம் மற்றும் வசூலைக் குவித்தது. கமல் ஹாஸனை பாக்ஸ் ஆபீஸில் முன்னணியிலும் அமர்த்தியுள்ளது.
சூர்யா
சூர்யாவுக்கு இந்த ஆண்டு பெரிய நிம்மதி கிடைத்தது, சிங்கம் 2-ன் பெருவெற்றி மூலம். குடும்பத்தோடு பார்க்கணுமா.. சூர்யா படம் போகலாம் என்ற இமேஜ் அவருக்குத் தொடர சிங்கம் 2 உதவியது. அதற்கு முன் அவரது 7-ம் அறிவு, மாற்றான் போன்றவை சற்று சறுக்கினாலும், அவரது இமேஜூக்கு பங்கம் வராததுதான் சூர்யாவின் ப்ளஸ்.
அஜீத்
பில்லா 2 தோல்விக்குப் பிறகு அடுத்த படத்துக்கு பெரிய இடைவெளி எடுத்துக் கொண்டார் அஜீத். அந்த இடைவெளி ஆரம்பம் படத்தின் அபார ஓபனிங்குக்கு உதவியது. படம் சுமார்தான் என்றாலும், வசூலில் பின்னியெடுத்தது.
விஜய் சேதுபதி
2012-ல் தொடர்ச்சியான வெற்றிப் படங்கள் தந்த விஜய் சேதுபதிக்கு, இந்த ஆண்டும் வெற்றி தொடர்ந்தது. முதல் வெற்றி சூதுகவ்வும். அடுத்து வெளியான இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா விமர்சன ரீதியாக பின்னடைவைச் சந்தித்தாலும், தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர்களுக்கு நல்ல லாபம். அந்த வகையில் இஆபா-வும் வெற்றிப் படமே. வணிக ரீதியாகவும் சரி, விமர்சகர்கள் பார்வையிலும் சரி, இந்த ஆண்டின் வெற்றிகரமான நாயகன் விஜய்சேதுபதிதான்.
சிவகார்த்திகேயன்
இந்த ஆண்டின் ஹாட்ரிக் வெற்றி நாயகன் சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அதிரடியாக மூன்று வெற்றிகளை தொடர்ச்சியாகப் பெற்ற சிவகார்த்திகேயன், இந்த ஆண்டின் வெற்றிகரமான ஹீரோவாகத் திகழ்கிறார். லட்சங்களில் இருந்த அவரது சம்பளம் இப்போது 5 கோடிகளைத் தாண்டி நிற்கிறது. அடுத்த ஆண்டும் இவரது ஆதிக்கம் தொடர வாய்ப்பிருக்கிறது.
ஆர்யா
ஆர்யாவுக்கு இந்த ஆண்டு நான்கு படங்கள் வெளியாகின. நான்கும் நான்கு விதம். அவற்றில் இரண்டு வெற்றிப் படங்கள். வெற்றி பெற்ற ராஜா ராணி, ஆரம்பம் படங்கள் மல்டி ஸ்டாரர். இன்னொரு மல்டி ஸ்டாரர் சேட்டை படு ப்ளாப். அவர் சோலோவாக நடித்த இரண்டாம் உலகம் தோல்வியில் முடிந்தது. ஆனால் பாக்ஸ் ஆபீஸைப் பொறுத்தவரை, ஆர்யாவும் இன்றைக்கு பெரிதும் விரும்பப்படும் நடிகராகியிருக்கிறார்.
0 comments:
Post a Comment