இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 1994-ம் ஆண்டில் இருந்து வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை முதல்முறையாக லாலா அமர்நாத் பெற்றார். கடைசியாக 2012-ம் ஆண்டில் சுனில் கவாஸ்கர் வாங்கினார். 2004-ம் ஆண்டில் மட்டும் ஒரே நேரத்தில் 4 பேர் கவுரவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 2012-13-ம் ஆண்டுக்கான விருதுக்குரியவரை தேர்வு செய்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன், செயலாளர் சஞ்சய் பட்டேல், மூத்த பத்திரிகையாளர் அயாஸ் மெமோன் ஆகியோர் கொண்ட கமிட்டி சென்னையில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தியது. இதில் இந்திய ஆல்-ரவுண்டர் ஜாம்பவான் கபில்தேவுக்கு இந்த முறை வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை அளிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த விருதை பெறும் 21-வது வீரர் கபில்தேவ் ஆவார். அவருக்கு விருதுடன் ரூ.25 லட்சமும் வழங்கப்படும். விருது வழங்கும் தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.54 வயதான கபில்தேவ் 1983-ம் ஆண்டு இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று தந்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர் ஆவார். 225 ஒரு நாள் போட்டிகளிலும், 131 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். டெஸ்டில் 5 ஆயிரம் ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் இவை இரண்டையும் சேர்த்து எடுத்த முதல் வீரர் என்ற சிறப்பும் கபில்தேவுக்கு உண்டு.
2007-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) அமைப்பில் கபில்தேவ் சேர்ந்து அதன் தலைவரானார். இதனால் அவருக்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் சேர்மன் பதவி பறிக்கப்பட்டது.பிறகு 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் ஐ.சி.எல். அமைப்பின் இருந்து விலகிய பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கரிசனம் கிடைக்கத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இப்போது கவுரவமிக்க இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளார்.
0 comments:
Post a Comment