தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா வலுவான தொடக்கத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே ஆட்டம் முடிக்கப்பட்டதால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களுடன் உள்ளது.இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும், தென் ஆப்ரிக்க அணியில் பீட்டர்சனுக்கு பதிலாக தஹிரும் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக தவான், முரளி விஜய் களமிறங்கினர்.
ஆட்டத்தின் 2வது பந்திலேயே தவான் பவுண்டரி விளாசினார். மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காததால் இந்திய வீரர்கள் சிரமமின்றி ரன்
சேர்த்தனர். ஸ்டெய்ன் பந்துவீச்சு இம்முறையும் எடுபடவில்லை. அவரது ஓவரில் முரளி விஜய், தவான் இருவரும் பவுண்டரிகளை விளாசினர். இந்நிலையில், கடந்த போட்டியில் காயமடைந்த மோர்க்கல் பந்துவீச்சை தொடர்ந்தார். காயத்துடனும் அபாரமாக பந்துவீசிய மோர்க்கல், ஆட்டத்தின் 14வது ஓவரில் தவான் (29) விக்கெட்டை வீழ்த்தினார்.
இதையடுத்து, கோஹ்லிக்கு பதிலாக புஜாரா களமிறக்கப்பட்டார். புஜாரா, முரளி விஜய் ஜோடி, உணவு இடைவேளைக்கு பிறகு அதிரடியாக ரன்களை
சேர்த்தது. தென் ஆப்ரிக்காவின் சுழற்பந்து வீச்சும் எடுபடாததால், உணவு இடைவேளைக்கு பிறகு வீசப்பட்ட முதல் 13 ஓவரில் இந்தியா 60 ரன்களை விளாசியது. மைதானத்தின் போக்கை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு ஆடிய முரளி விஜய், புஜாரா இருவருமே டெஸ்ட் அரங்கில் தங்களது 4வது
அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.61 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் வெளிச்சமின்மை காரணமாக முதல் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் என்ற வலுவான நிலையில் உள்ளது. முரளி விஜய் 91, புஜாரா 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
0 comments:
Post a Comment