பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரை 1 க்கு 1 என சமப்படுத்திக்கொண்ட பின்னர் ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கட் தொடரை நழுவவிட்ட இலங்கை அணி, நாளை ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் திறமையை வெளிப்படுத்தி வெற்றிகொள்ள முயற்சிக்கவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளதாக இரண்டு நாடுகளினதும் கிரிக்கட் அணித் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளதால் இத் தொடர் விறுவிறுப்பைத் தோற்றுவிக்கும் என நம்பப்படுகின்றது.இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி அபுதாபி ஷெய்க் சய்யத் விளையாட்டரங்கில் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி துபாய் விளையாட்டரங்கில் ஜனவரி 8 முதல் 12 வரையும் கடைசி டெஸ்ட் போட்டி ஷார்ஜா விளையாட்டரங்கில் ஜனவரி 16 முதல் 20 வரையும் நடைபெறவுள்ளன.இலங்கை அணியைப் பலப்படுத்தும் பொருட்டு சிரேஷ்ட வீரர்களான மஹேல ஜயவர்தன (முன்னாள் அணித் தலைவர்), விக்கட் காப்பாளர் பிரசன்ன ஜயவர்தன, சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் ஆகியோர் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களைவிட எஞ்சலோ மெத்யூஸ் தலைமையிலான இலங்கை குழாமில் குமார் சங்கக்கார, தினேஷ் சந்திமால், திமுத் கருணாரட்ன, லஹிரு திரிமான்ன, நுவன் குலசேகர, சுரங்க லக்மால், ஷமிந்த எரங்க, நுவன் ப்ரதீப், சச்சித்ர சேனாநாயக்க, டில்றுவன் பெரேரா, புதுமுகம் விஷ்வா பெர்னாண்டோ (இடதுகை வேகப்பந்துவீச்சாளர்) ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.
இலங்கை அணியைப் பொறுத்தமட்டில் மஹேல ஜயவர்தன (138 டெஸ்ட்கள், 10,806 ஓட்டங்கள்), குமார் சங்கக்கார (117 டெஸ்ட்கள், 10,486 ஓட்டங்கள்), பிரசன்ன ஜயவர்தன (52 டெஸ்ட்கள், 1,900 ஓட்டங்கள்), எஞ்சலோ மெத்யூஸ் (33 டெஸ்ட்கள், 1792 ஓட்டங்கள்), ரங்கன ஹேரத் (47 டெஸ்ட்கள், 200 விக்கட்கள்), நுவன் குலசேகர (20 டெஸ்ட்கள், 46 விக்கட்கள்) ஆகிய வீரர்களே அனுபவசாலிகளாக காணப்படுகின்றனர்.
எனவே இலங்கை அணியை நல்ல நிலைக்கு இட்டுச்செல்லும் பாரிய பொறுப்பு இவர்களது கைகளிலேயே தங்கியுள்ளது.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தமட்டில் யூனிஸ் கான் (86 போட்டிகள், 7,௧௧௪ ஓட்டங்கள்), அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் (43 டெஸ்ட்கள், 2,854 ஓட்டங்கள்), மொஹமத் ஹவீஸ் (34 டெஸ்ட்கள் 2061 ஓட்டங்கள், 34 விக்கட்கள்) அஸ்ஹர் அலி (31 டெஸ்ட்கள், 2,081 ஓட்டங்கள்), உமர் குல் 47 டெஸ்ட்கள், 163 விக்கட்கள்), சயீத் அஜ்மால் (30 டெஸ்கள், 159 விக்கட்கள்), அப்துர் ரெஹ்மான் (19 டெஸ்ட்கள், 90 விக்கட்கள்) ஆகியோர் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.
வரலாறு
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான அங்குரார்ப்பண டெஸ்ட் தொடர் பாகிஸ்தானில் 1982 மார்ச் மாதம் நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட அத் தொடரில் பாகிஸ்தான் 2 க்கு 0 என வெற்றிபெற்றிருந்தது. தொடர்ந்து 1985 இல் மீண்டும் பாகிஸ்தானில் நடைபெற்ற தொடரிலும் 2 க்கு 0 என பாகிஸ்தான் வெற்றிபெற்றிருந்தது.
1986இல் இலங்கையில் நடைபெற்ற தொடரில் இலங்கை முதல் தடவையாக பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றிகொண்டதுடன் தொடரையும் 1 க்கு 1 என சமப்படுத்திக்கொண்டது.
கொழும்பு சி சி சி மைதானத்தில் 1986 மார்ச் 14 முதல் 18 வரை நடைபெற்ற அந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டுலீப் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி, இம்றான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை 8 விக்கட்களால் வெற்றிகொண்டது.
பாகிஸ்தான் முதல் இன்: 132 (கோசல குறுப்புஆராச்சி 44 க்கு 5 விக்., அஷன்த டி மெல் 39 க்கு 3 விக்.), 2வது இன்: 172 (ரவீந்திரன் ரட்நாயக்க 37 க்கு 5 விக்.) இலங்கை முதல் இன்: 273 (அர்ஜுன ரணதுங்க 73 ரவி ரட்நாயக்க 38, அரவிந்த டி சில்வா 37, சிதத் வெத்தமுனி 37), 2வது இன்: 32 க்கு 2 விக்.
அதன் பின்னர் நடைபெற்ற இரண்டு தொடர்களிலும் தோல்வி அடைந்த இலங்கை 1995இல் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் முதல் தடவையாக தொடர் ஒன்றில் வெற்றிகொண்டது. அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட அந்தத் தொடரை 2 க்கு 1 என வெற்றிக்கொண்டு வரலாறு படைத்தது. அத் தொடரில் பாகிஸ்தானின் அணித் தலைவராக பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளர் ரமீஸ் ராஜா தலைமை தாங்கியிருந்தார்.
இவ்வாறாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர்கள் இரண்டு நாடுகளிலும் மாறி மாறி நடந்துவந்தபோதிலும் 2009ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி காலை இலங்கை அணியினர் பயணித்த பஸ் வண்டி மீது லாகூரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இலங்கை உட்பட மற்றைய நாடுகள் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதை நிறுத்திக்கொண்டன.
இதன் காரணமாகவே நடுநிலையான ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.இதுவரை இரண்டு நாடுகளுக்கும் இடையில் 43 போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன் 16இல் பாகிஸ்தானும் 10இல் இலங்கையும் வெற்றிபெற்றுள்ளன. 17 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
0 comments:
Post a Comment