Tuesday, December 31, 2013

இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி டர்பன், கிங்ஸ்மீட் மைதானத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கியது.


Tamil-Daily-News_57846796513

டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 334 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. விஜய் 97, புஜாரா 60, கோஹ்லி 46, ரகானே 51* ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ஸ்டெய்ன் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 500 ரன் குவித்தது. கடைசி டெஸ்டில் களமிறங்கிய காலிஸ் 115 ரன் விளாசினார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 6 விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து 166 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன் எடுத்திருந்தது.

புஜாரா 32, கோஹ்லி 11 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். ஸ்டெயின் வீசிய முதல் பந்திலேயே கோஹ்லி விக்கெட் கீப்பரிடம் பிடிபட்டு ஆட்டமிழந்தார். பந்து கோஹ்லியின் மட்டையில் படாமல் தோள்பட்டையில் உரசி சென்ற நிலையில், நடுவரின் தவறான கணிப்பால் இந்தியா முக்கியமான விக்கெட்டை இழந்தது. அடுத்து புஜாராவும் மேற்கொண்டு ரன் ஏதும் சேர்க்காமல் ஸ்டெயினின் துல்லியமான வேகத்தில் கிளீன் போல்டாக இந்திய அணி தடுமாறியது. ரோகித் 25 ரன் எடுத்து பிலேண்டர் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார்.

ரகானே - கேப்டன் டோனி ஜோடி 6வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தது. டோனி 15 ரன் எடுத்து ராபின் பீட்டர்சன் சுழலில் அல்விரோ வசம் பிடிபட்டார். அதே ஓவரிலேயே ஜடேஜா (8) தேவையில்லாமல் 2வது சிக்சர் விளாச ஆசைப்பட்டு விக்கெட்டை தானம் செய்ய, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. ஜாகீர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாக்குப்பிடித்து 41 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன் எடுத்தார். ரகானே - ஜாகீர் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது.
இஷாந்த் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

கடைசி விக்கெட்டுக்கு முகமது ஷமி கம்பெனி கொடுக்க, சதத்தை நெருங்கினார் ரகானே. எனினும், பிலேண்டரின் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதத்தை பூர்த்தி செய்ய நினைத்த அவர் 96 ரன் எடுத்த நிலையில் (157 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) ஸ்டம்புகள் சிதற பரிதாபமாக அவுட் ஆனார். இந்தியா 2வது இன்னிங்சில் 223 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஷமி (1) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ராபின் பீட்டர்சன் 4, ஸ்டெய்ன், பிலேண்டர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 58 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 11.4 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 59 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ரோகித் பந்தில் தொடர்ச்சியாக சிக்சர், பவுண்டரி விளாசி வெற்றியை வசப்படுத்தினார் தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித். அல்விரோ பீட்டர்சன் 31, ஸ்மித் 27 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்கா 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. டர்பன் டெஸ்டில் 9 விக்கெட் வீழ்த்தி அசத்திய ஸ்டெய்ன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். டிவில்லியர்ஸ் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

ஸ்டெய்ன் 350

*தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், டெஸ்ட் போட்டிகளில் தனது 350வது விக்கெட்டை நேற்று கைப்பற்றினார். இஷாந்த் விக்கெட்டை வீழ்த்தியபோது அவர் இந்த சாதனை மைல் கல்லை எட்டினார்.

*நடுவர்களில் சில தவறான முடிவுகள் இந்திய அணிக்கு நேற்று பெரும் பின்னடைவை கொடுத்தன. டிஆர்எஸ் முறையை கண்மூடித்தனமாக எதிர்த்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம் இனியாவது தனது பிடிவாத போக்கை கைவிடுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

*இந்த போட்டியுடன் டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெற்ற ஆல் ரவுண்டர் ஜாக் காலிசை, தென் ஆப்ரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித் மற்றும் மார்னி மார்கெல் இருவரும் தங்கள் தோள்களில் சுமந்தபடி கிங்ஸ்மீட் மைதானத்தை வலம் வந்தனர்.

*தென் ஆப்ரிக்க மண்ணில் இந்தியா 5வது முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. வெளிநாட்டு மைதானங்களில் கடைசியாக விளையாடிய 10 டெஸ்டில், இந்திய அணி 9வது தோல்வியை சந்தித்துள்ளது.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search