பிரமாண்ட பட்ஜெட், அதைவிட பிரமாண்ட எதிர்ப்பார்ப்பை கிளப்பும் விளம்பரங்கள் என்று வெளியாகிற பெரும்பாலான படங்கள் மக்களைக் கவராமல் போகின்றன. இந்த ஆண்டைப் பொறுத்தவரை பெரிய இயக்குநர்கள்... தமிழ் சினிமாவின் போக்கை கட்டமைத்தவர்கள் என்று கொண்டாடப்பட்ட இயக்குநர்களின் படங்கள் வெளியாகின. பெரும்பாலும் சொதப்பின.
கடல்
மணிரத்னம் என்றாலே பலருக்கும் ஒரு மயக்கம். அவர்தான் சிறந்த இயக்குநர்.. அவர் என்ன எடுத்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று. இந்த ஆண்டு அவர் கொடுத்த மகா மட்டமான படம் கடல். கார்த்திக்கின் மகன் கவுதமை ஹீரோவாகவும், ராதாவின் மகள் துளசியை நாயகியாகவும் அறிமுகப்படுத்தினார் இந்தப் படத்தில். சொதப்பலான திரைக்கதை, மட்டமான வசனங்கள், என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியாத அளவுக்கு புரியாத காட்சிகள்... மணிரத்னம் மினிரத்னமாகிவிட்டதை பறைசாற்றிய படம். ஒரே ஆறுதல் ரஹ்மானின் இரண்டு அருமையான மெலடிகள்!
அன்னக்கொடி
ஒரே மாதிரி பார்முலாவுக்குள் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு புது ஆக்ஸிஜன் கொடுத்த பெருமைக்குரிய இயக்குநர் பாரதிராஜா. அவர் இயக்கத்தில் சிலஆண்டுகளுக்கு முன் வெளியான பொம்மலாட்டம் கூட அவரது இயக்கத் திறனும் படைப்பாற்றலும் இன்னும் வீர்யமாக இருப்பதை மெய்ப்பித்தது. ஆனால் இந்த ஆண்டு அவர் இயக்கியதாக சொல்லப்பட்ட அன்னக்கொடி, நச்சுக் கொடியாக மாறி அவரை நேசித்தவர்களை வதைத்துவிட்டது. இது பாரதிராஜா படம்தானா... அல்லது உதவியாளர்களை இஷ்டப்படி எடுக்கவிட்டு இவர் பேரைப் போட்டுக் கொண்டாரா.. மாமனாரின் இன்பவெறி கதைக்கு ஏன் மெனக்கெட்டு இவ்வளவு பில்ட் அப்... உலக சினிமா வரலாற்றிலேயே இத்தனை கேவலமான க்ளைமாக்ஸ் இருக்காது.... என்றெல்லாம் விமர்சனங்கள் குவிந்தது இந்தப் படத்துக்கு.
இரண்டாம் உலகம்
இன்றைய இயக்குநர்களில் பெரும் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவர் செல்வராகவன். ஆனால் படத்தை அறிவிப்பதும் பின்னர் விலகிக் கொள்வது அல்லது கைவிடுவதுமான அவரது போக்கு... அவரது தொழில்முறைத் தன்மையை சந்தேகத்துக்குள்ளாக்கியது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஆரம்பித்த சறுக்கல் இரண்டாம் உலகம் வரை அவருக்குத் தொடர்கிறது. குறிப்பாக இரண்டாம் உலகம். அதீத கற்பனை உலகைக் காட்டுவதாக புறப்பட்ட அவர், அதற்கான அதிகபட்ச மெனக்கெடல்களை மேற்கொள்ளவில்லை. படத்தின் காட்சிகள் அனைத்தும் மனோரீதியாக அவரது அமைதியின்மையைப் பிரதிபலிப்பது போன்ற தெளிவின்றியும் அரைகுறையாகவும் அமைந்தது ரசிகர்களை ஈர்க்கவில்லை. பொருளாதார ரீதியில் பெரும் இழப்பை உண்டாக்கிய இந்தப் படத்தால் செல்வா தனது பெரிய சொத்து ஒன்றையே இழக்க நேர்ந்தது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் போன்ற வலுவான சங்கங்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேர்ந்தது.
ஆதி பகவன்
இந்தத் தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் என்று கருதப்பட்டவர் அமீர். ஆனால் அந்த பெயரை தகர்த்தது யோகி. அதன் பிறகு படைப்பை விட, திரையுலக அரசியலை அவர் அதிகம் நேசிக்க ஆரம்பித்துவிட்டதால், ஆதி பகவன் படத்தை நான்கு ஆண்டுகள் இழுத்தார். அப்படியாவது படம் சிறப்பாக வந்ததா என்றால்... பெரும் தோல்விப்படமாக அமைந்தது. ஜெயம் ரவி போன்ற நடிகரை நான்காண்டுகள் காக்க வைத்த பெருமை மட்டுமே படத்துக்கு மிஞ்சியது.
நய்யாண்டி
ஒரு படம் வென்றால், என்னமோ அதன் கதையைக் கேட்க நான் இப்படி கவனம் செலுத்தினேன்... இப்படி மெனக்கெட்டேன் என்று மிகையாகக் காட்டிக் கொள்ளும் தனுஷ், எப்படி இந்த படத்தை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. களவாணி, வாகை சூடவா போன்ற நல்ல படங்களைத் தந்த சற்குணத்தின் நய்யாண்டி. இந்தப் படத்தை யாருக்காக எடுத்தார் சற்குணம் என்றே புரியவில்லை. போதாக்குறைக்கு இந்த 'ஆழாக்கு' நஸ்ரியாவின் தொப்புள் சர்ச்சை வேறு.
0 comments:
Post a Comment