அமெரிக்க குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், பிரிட்டனுக்குச் செல்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாலியல் வழக்கொன்றில் மைக் டைசன் குற்றவாளியாக காணப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.
இத்தடை குறித்து அறிந்த மைக் டைசன், தனது சுயசரிதை நூல் தொடர்பாக பிரிட்டனில் நடைபெறவிருந்த நிகழ்வொன்றை இரத்துச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
1986 ஆம் ஆண்டு தனது 20 வயதில் உலகின் அதிபார குத்துச்சண்டை சம்பியனாகி சாதனை படைத்த மைக் டைசன், 1991 ஆம் ஆண்டு அமெரிக்க அழகுராணியொருவரான டிஸைரி வோஷிங்டன் என்பவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பான வழக்கில் 1992 ஆம் ஆண்டு குற்றவாளியாக காணப்பட்டார். அதனால் அவருக்கு 6 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதையடுத்து 3 வருடகாலம் சிறையிலிருந்தபின் விடுதலையான மைக் டைசன், குத்துச்சண்டை சம்பியன் போட்டியின்போது, தன்னுடன் மோதிய இவான்டர் ஹொலிபீல்ட்டின் காதை கடித்தமை, பிறரை தாக்கியமை, உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். போதைப்பொருள் பயன்படுத்தியமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை முதலான வழக்குகளிலும் அவர் குற்றவாளியாக காணப்பட்டார்.
தற்போது 47 வயதான மைக் டைசன் மிகவும் திருந்தியவராக காணப்படுகிறார். திரைப்படம், ஓரங்க நாடகத்திலும் அவர் நடித்ததார். அண்மையில் 'அன் டிஸ்பியூடட் ட்ரூத்' எனும் தலைப்பில், தனது சுயசரிதை நூலை வெளியிட்ட அவர் பல நாடுகளில் இந்நூலின் ஊக்குவிப்பு நிகழ்வுகளில் பங்குபற்றத் திட்டமிட்டுள்ளார்.
இதன் ஓர் அங்கமாக இவ்வார இறுதியில் பிரிட்டனுக்குச் செல்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், மைக் டைசனுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த வருடம் மாற்றம் செய்யப்பட்ட விதிகளின்படி, 4 வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு காணப்பட்டவர்களுக்கு பிரிட்டனுக்கு வர அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் பிரிட்டனுக்குச் செல்வதிலிருந்து மைக் டைசன் தடுக்கப்பட்டார்.
இதனால் வேறு வழியின்றி லண்டனில் நடத்தத் திட்டமிடப்பட்ட தனது நூலுக்கான விற்பனை மேம்பாட்டு நிகழ்வுகளை இரத்துச் செய்துள்ளார் மைக் டைசன். விஸா விதி மாற்றப்பட்டதால் தான் பிரிட்டனுக்குச் செல்ல முடியாமை குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாக மைக் டைசன் கூறியுள்ளார்.
'2012 டிசெம்பரிலிருந்து அமுலுக்கு வந்த பிரித்தானிய குடிவரவு சட்ட விதி மாற்றங்கள் குறித்து அறிந்து நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.
கடந்த தசாப்தத்தில் நான் அடிக்கடி பிரிட்டனுக்குச் சென்றுவந்தேன். இந்த விதி மாற்றங்கள் நான் பிரிட்டனுக்குச் செல்வதை பாதிக்கின்றன. எனது இரசிகர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். எவ்வாறெனினும் அடுத்த வருடம் எனது பிரித்தானிய சுற்றுலாவை மேற்கொள்வதற்காக அனுமதி பெறுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நான் இணைந்து செயற்பட்டு வருகிறேன்.
தற்போது நான் பாரிஸ் நகரில் உள்ளேன். பிரிட்டனுக்குச் செல்லவிருந்த காலத்தில் பாரிஸில் ஊடங்களை சந்திக்கிறேன். பிரித்தானிய சட்டங்களை நான் மிகவும் மதிக்கிறேன். மீண்டும் அங்கு செல்வதற்கான முறையான நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன்' என மைக் டைசன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய உள்துறை அமைச்சு இவ்விவகாரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்iகையில், 'தனிப்பட்டவர்களின் விடயம் குறித்து நாம் கருத்துத் தெரிவிப்பதில்லை. பாரதூரமான குற்றச்செயல்களில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் பிரிட்டனுக்குச் வர அனுமதிக்காதிருப்பதற்கான உரிமை எமக்குள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மைக் டைசனுக்கு விஸா மறுக்கப்பட்டதை குடும்ப வன்முறைகள், பாலியல் வல்லுறவுகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் அமைப்பொன்று வரவேற்றுள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நீண்ட கால பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை இந்த செய்தி வெளிப்படுத்துகிறது. கவலைக்குரிய விதமாக, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மைக் டைசனாலும் அவரின் ஆதரவாளர்களாலும் மறக்கப்பட்டவர்களாகியுள்ளனர.' என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment