வடமாகாண சபைக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான வேட்பாளர் சீ.வீ.விக்னேஸ்வரன் மற்றுமொரு செல்வநாயகம் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் நேர்மையான நீதிபதி, ஆனால் மறுப்பக்கத்தில் அவர் மற்றுமொரு செல்வநாயகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமது பார்வையில் தந்தை செல்வா என்று அழைக்கப்படும் செல்வநாயகம், பச்சாத்தாபமற்ற ஒரு இனவாதி என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பெயர் ஒரு காலகட்டத்தில் நாட்டின் அனைத்து தரப்பாலும் உச்சரிக்கப்பட்டது. அதற்கு முன்னர் விஜயவீரவின் பெயர் உச்சரிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாராநாயக்கவின் பெயர் உச்சரிக்கப்பட்டது. தற்போது சீ.வி.விக்னேஸ்வரனின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. அவரது பெயரை சில தரப்பினர் நம்பிக்கையுடனும், சிலர் அச்சத்துடனும் உச்சரிக்கின்றனர்.
செல்வநாயகத்தை போன்றே அவரும் ஒரு இனவாதியே என்று குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார். அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அடிப்படைவாத கட்சி, அல்லது, அடிப்படை இனவாத கட்சிகளின் ஒரு கூட்டு. இந்த கூட்டமைப்பு தெரிவு செய்கின்ற எந்த ஒரு வேட்பாளரும், இனவாதியாகவே இருப்பார் என்பதில் ஐயமில்லை. எனினும் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றவர்களுள் நானும் ஒருவன். காரணம் முரட்டுத்தனமான பிடிவாதம் மிக்க இனவாதி ஒருவரை தெரிவு செய்யாமல், நேர்மையான அமைதியான ஒரு இனவாதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்துள்ளது.
விக்னேஸ்வரன் 2001ம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசராக தெரிவான போது, அவர் தொடர்பில் நான் விமர்சித்திருந்தேன். ஆனாலும் அதன் பின்னர், அவர் விசாரித்த தாம் வாதாடிய வழக்குகளின் போது அவர் பாரபட்சமற்று வாதப் பிரதிவாதங்களை உன்னிப்பாக கேட்டு, அதன் அடிப்படையில் தீர்ப்பினை வழங்கினார். எனவே அவர் ஒரு சிறந்த நீதிபதி என்பதில் ஐயமே இல்லை.
இந்தநிலையில் அவர் வடக்கின் முதலமைச்சராக தெரிவானால் சக உறுப்பினர்களின் ஆடம்பரங்களுக்காக பொது மக்களின் நிதிகளை விரயம் செய்பவராகவோ அல்லது பொது நிதியை கொள்ளையிடுபவராக இருப்பார் என்று கனவில் கூட நினைக்க முடியாது. அதிகாரப்பகிர்வு விடயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பார்த்தால், ஒரு சிறந்த முதலமைச்சர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது அவர் ஒரு சிறந்த உதாரணமாக இருப்பார்.
ஆனால் அவர் ஒரு அடிப்படை இனவாதி. அவர் இனவாதியாக இல்லாவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரை முதலமைச்சு வேட்பாளராக தெரிவு செய்திருக்காது. 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது, தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் செல்வநாயகத்தினால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் சிலாபம் முதல் மன்னார் வரையான கரையோர பகுதி உள்ளிட்ட பகுதிகள் தமிழர்களின் தாயகம் என்று கூறப்பட்டிருந்தது. குறைந்தபட்சம், தமிழ் பேசும் மக்கள் என்ற வார்த்தைக்கூட இருக்கவில்லை. இது செல்வநாயகம் எந்த அளவு இனவாதி என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்த விஞ்ஞாபனத்தையே விக்னேஸ்வரனும் பின்பற்றுபவராக இருந்தால் கொழும்பில் உள்ள தமிழர்களுக்கும் இந்த பிரதேசம் தாயகமாக இருக்கும்.
ஆனால் மன்னாரில் உள்ள சிங்களவர் ஒருவர் கூட வெளியாளாக பார்க்கப்படுவார். 1965ம் ஆண்டு டட்லி சேனாநாயக்க பிரதமராக வருவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர், செல்வநாயமும், டட்லியும் சந்தித்துக் கொண்டனர். இதன் போது இருவருக்கும் இடையிலான உடன்படிக்கை மிகப்பெரிய இனவாதத்தை உணர்த்துகிறது. இந்த உடன்படிக்கையின் படி, நாட்டில் எந்த ஒரு நீர்பாசன வேலைத்திட்டங்களிலும், வடமாகாண காணிகள் பகிரப்படும். இதன் போது வேலைத்திட்டத்தின் முதல் முன்னுரிமை வடக்கு கிழக்கில் உள்ள அந்தந்த மாவட்டங்களின் காணியற்றவர்களுக்கு வழங்கப்படும்.
இரண்டாவது முன்னுரிமை அந்த மாகாணத்தின் மாவட்டங்களில்; உள்ள தமிழர்களுக்கு வழங்கப்படும். மூன்றாவதாக வெளி மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறானால் வெளிமாவட்டங்களில் உள்ள தமிழர்களுக்கும், வடக்கில் காணிகள் பிரிக்கப்படும் போது, காணிகளில் உரிமை உண்டு என்பதாகும். ஆனால் மலையக தமிழர்கள் உட்பட்ட சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு அதில் முன்னுரிமை வழங்கப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகளால் செல்வநாயகம் கடுமையான இனவாதியாக பார்க்கப்படுகிறார். இதே கொள்கையை பின்பற்றும் சீ.வி.விக்னேஸ்வரனும் அவர் போன்ற இனவாதியாகவே திகழ்வார். என்று எஸ்.எல்.குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment