சரஸ்வதி, லஷ்மி, பார்வதி, துர்கை என எண்ணற்ற பெண் தெய்வங்களை வழிபடும் குழந்தைகளும் பெண்களும் அதிக அளவில் வன்முறைக்கு ஆளாகின்றனர். திட்டுவது, அடிப்பது, மிரட்டுவது, உணவு கொடுக்காமல் துன்புறுத்துவது, தனி அறையில் அடைத்து வைப்பது, நடத்தையை மோசமாகச் சித்தரிப்பது, கொலை செய்வது என்று பல்வேறு விதங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. குற்றங்களைச் சந்திக்காத குழந்தையோ, பெண்களோ மிகமிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கக்கூடிய விஷயம்.
குழந்தைகளைப் பொறுத்த வரை அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, உறவினர்கள் மற்றும் ஆசிரியர்களால் வன்முறை நிகழ்த்தப்படுகிறது. இப்படி வன்முறையால் பாதிக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் மனதளவில் மிகவும் காயப்பட்டுப் போகிறார்கள். பிடிவாதம், முரட்டுத்தனம் வந்துவிடுகிறது. சில குழந்தைகள் மனப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள். 15-45 வயதுக்குட்பட்ட பெண்களில் 68 சதவிகிதம் பேர் குடும்ப வன்முறைக்கு இலக்காவதாக சமீபத்திய புள்ளிவிவரம் சொல்கிறது. வீட்டில் உள்ள அம்மா, அப்பா, கணவன், உறவினர்கள் மூலம் இந்த வன்முறை அரங்கேற்றப்படுகிறது.
சமையல் சரியில்லை, சொல் பேச்சுக் கேட்பதில்லை, எதிர்த்துப் பேசுதல், வரதட்சணை, சந்தேகம் போன்ற காரணங்களால் திருமணம் ஆன பெண்கள் கணவன் மூலம் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். அடித்தல், முடியைப் பிடித்து இழுத்தல், பல்லை உடைத்தல், சூடு வைத்தல், கை, கால்களை முறித்தல் போன்ற உடல்ரீதியான பயங்கரங்களுக்கு உள்ளாகிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் பெண்கள் மனதளவில் மிகவும் பலவீனமடைந்துவிடுகிறார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் தற்கொலை முடிவை நாடுகிறார்கள். 7.5 சதவிகித பெண்கள் தற்கொலை முடிவை எடுப்பதற்குக் காரணம் குடும்ப வன்முறைதான்.
காயங்களுக்கு அடுத்த மிகப்பெரிய வன்முறை பாலியல் தொடர்பானது. இல்லறம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து, மனம் விரும்பி ஈடுபடுவது என்பதை ஆண்கள் ஏற்றுக்கொள்வதில்லை. விருப்பமோ, விருப்பமின்மையோ அது தங்களின் உரிமை என்றே நினைக்கிறார்கள். இதனால் மனைவிக்கு ஆர்வமோ, விருப்பமோ இல்லாவிட்டாலும் வற்புறுத்தி, திட்டி, அடித்து, உறவில் ஈடுபடுகிறார்கள். மனமும் உடலும் காயப்பட்ட பெண்கள் மேலும் விரக்தியடைகிறார்கள். இந்தியாவில் மட்டும் அதிக அளவில் பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாவது ஏன்?
ஒரு பெண்ணை அடிப்பதோ, அரவணைப்பதோ இங்கு ஆணின் உரிமையாக காலம் காலமாக நினைக்கப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு முன்பு அப்பா அடிக்கலாம்... திருமணத்துக்குப் பின்பு கணவன் அடிக்கலாம். இந்த எண்ணம் ஆண்களுக்கு மட்டுமல்ல... அடி வாங்கும் பெண்களுக்கும் இருப்பதுதான் மிகப்பெரிய பிரச்னை. படித்த பெண்கள் கூட, கோபம் வரும்போதோ... இல்லை தாங்கள் தவறு செய்யும்போதோ கணவன் அடிப்பது குற்றமில்லை என்றே கருதுகிறார்கள். இதனாலும், ஆண்களுக்கு அவர்கள் செய்வது தவறு என்பதே தெரியாமல் போய் விடுகிறது. கணவனை எதிர்த்து சண்டையிடும் சில பெண்கள் கூட, புகார் அளிக்க முன்வராதது இன்னொரு ஆபத்தாக பெண்களுக்கும், இன்னொரு பாதுகாப்பாக ஆண்களுக்கும் அமைந்துவிடுகிறது.
இதனால் குடும்ப வன்முறையில் இறங்குபவர்கள் குற்றவாளியாக சட்டத்துக்கு முன் வருவதில்லை. அப்படியே சிலர் சட்டத்தின் உதவியை நாடும்போது, நடவடிக்கைகள் எளிதில் எடுக்கப்படுவதில்லை. கணவனுக்காக இன்ப துன்பங்களில் பங்கேற்கலாம்... விட்டுக் கொடுக்கலாம். அதே வேளையில், பெண் தன்னை எந்த விதத்திலும் தாழ்த்திக்கொள்ளவோ, இரண்டாம்தர பிரஜையாகவோ கருத வேண்டியதில்லை. கணவனை மனைவி மதிப்பது போல, மனைவியையும் கணவன் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆளும் மனப்பான்மை இருக்கும் ஆண்களிடம்தான் பெண்களை அடிமைப்படுத்தும் மனப்பான்மை தோன்றும். முதலில் பெண்களாகிய நாம், நம்மை ஆணுக்கு இணையான மனுஷியாக நினைப்போம். நம் ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதைச் சொல்லிக் கொடுப்போம்.
0 comments:
Post a Comment