Sunday, December 1, 2013

ஐ-பேடில் ‘டெம்பிள் ரன்’ கேம் விளையாடும் முருகன், ட்ரட்மில்லில் வாக்கிங் போகும் விநாயகர், ஆப்பிள் மேக்கில் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டிருக்கும் சிவன், கையில் கிடாருடன் நாரதர், நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் பார்வதி என படத்தின் அறிமுகத்திலேயே டிஜிட்டல் தேவலோகத்தை காட்டுகிறார்கள். ஏதோ ஒன்றை புதிதாகச் சொல்லப் போகிறார்கள் என ஆர்வமாக நிமிர்ந்து உட்கார்ந்தால்...

Navina-Saraswathy-Sabathamஜெய், ‘விடிவி’ கணேஷ், சத்யன், ராஜ்குமார் (நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்) இவர்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை ஒரு அரைமணி நேரம் விலாவரியாகக் காட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பூமியில் சின்னச் சின்ன தப்புகளாகச் செய்துகொண்டு, எப்பொழுதும் குடி கும்மாளம் என சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைத் திருத்தி, நல்வழிப்படுத்த ஒரு திட்டம் தீட்டுகிறார் சிவன். அதற்காக படத்தின் முதல் பாகத்தில் ‘ஹேங்ஓவர்’ கதையில் இந்த நான்கு பேரையும் நடிக்க வைத்து, இன்டர்வெலில் ‘காஸ்ட்அவே’ கடல் தீவுக்குள் அனுப்பி வைத்து தன் திருவிளையாடலை ஆரம்பிக்கிறார் சிவபெருமான். முடிவு ‘ஹேங்ஓவரா?’ இல்லை... ‘காஸ்ட்அவே’ க்ளைமேக்ஸா? என்பது சஸ்பென்ஸ்.

முதல்பாதியில் கொஞ்சம் காதல், சின்னச் சின்ன காமெடி, கொஞ்சம் ‘டெக்னாலஜி நக்கல்கள்’ என ஆரம்பித்து இடைவேளைவரை என்ன செய்வது எனத் தெரியாமல் இழுத்தடித்திருக்கிறார்கள். அதன்பின்பு இரண்டாம் பாதி முழுக்க ஒரு தீவிலேயே நான்கு பேரையும் மாற்றி மாற்றி காட்டி போரடிக்கிறார்கள். க்ளைமேக்ஸில்.... படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அறிவுரை வேறு சொல்கிறார்கள்?

maxresdefault


 காமெடிப் படம் எடுத்தால் எப்படியும் ஓடிவிடும் என்ற நம்பிக்கையில் அறிமுக இயக்குனர் கே.சந்துரு, இதுபோன்ற கதையோடு களமிறங்கியிருப்பதற்கு உண்மையிலேயே பெரிய தைரியம் வேண்டும்!

‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’ என தன் நடிப்பின் மூலம் அவ்வப்போது மனதை அள்ளும் ஜெய், இதுபோன்ற படத்தில் ‘கமிட்’டாகி சிக்கிக்கொள்வது ஏன் என்றுதான் புரியவில்லை. படத்தில் ஹீரோ ஜெய்யா? அல்லது விடிவி கணேஷா எனச் சொல்லும் அளவிற்கு படம் முழுக்க வியாபித்திருக்கிறார் இந்த ‘கரகரப்’ப்ரியர்!

சத்யன், ராஜ்குமாருக்கெல்லாம் பெரிய வேலை ஒன்றும் இல்லை. அவ்வப்போது டயலாக் பேசி சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். ஹீரோயின் நிவேதா தாமஸ் ஆரம்பத்தில் ஒரு இரண்டு காட்சிகள் வருகிறார். அதன் பிறகு க்ளைமேஸில்தான் காட்டுகிறார்கள். அடுத்த படத்தில் நல்ல வாய்ப்புக் கிடைக்கட்டும்!

காமெடிப் படமாக இருந்தாலும், அந்த தேவலோகத்தை காட்டுவதில் கொஞ்சம் சிரத்தை எடுத்துள்ள விஷுவல் டீமை பாராட்டலாம். ‘காத்திருந்தாய் அன்பே...’ பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் அழகு! மற்ற பாடல்களும், பின்னணி இசையும் ரொம்பவே சுமார். ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவை பட்ஜெட்டிற்கு ஏற்ப படத்தில் பிரதிபலித்திருக்கிறது.

பழைய ‘சரஸ்வதி சபத’த்தை வைத்து ஒரு ஃபேன்டஸி படத்தை கொடுக்க முயன்றிருக்கும் இயக்குனர், அதற்கான மெனக்கெடலை கொஞ்சம் திரைக்கதையில் காட்டியிருந்தால் தாராளமாகப் பாராட்டியிருக்கலாம். படத்தில் நாரதராக வரும் மனோபாலா சிவனிடம் ஒரு டயலாக் பேசுவார்.

‘‘படம் ஒரே இடத்திலேயே சுத்திக்கிட்டிருக்கு சுவாமி... சீக்கீரம் சீனை மாத்துங்கள். இல்லையென்றால் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபேஸ்புக்கில் ஃபர்ஸ்ட் ஹாஃப் சுமார், செகண்ட் ஹாஃப் மொக்கை என ஸ்டேட்டஸ் போட்டுவிடுவார்கள்!’’. இதுக்கு மேல படத்தைப் பத்தி நாம என்ன சொல்றது? அதான் நாரதரே சொல்லிட்டாரே.... ‘நாராயணா... நாராயணா..!’.

( இந்தப் படத்துக்கு நியாயப்படி ‘நவீன திருவிளையாடல்’னுதான் பேரு வச்சிருக்கணும்... போனா போகுதுன்னு ஒரு ரெண்டு சீன்தான் வர்றாங்க சரஸ்வதி... அதுசரி... காமெடிப் படத்துல என்னப்பா லாஜிக் வேண்டிக் கெடக்கு? )
Posted by V4Tamil .com on 4:00 AM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search