Monday, December 23, 2013

எந்நேரமும் பனிப்பாளங்களாக காணப்படும் கிரீன்லாந்து பகுதிகளின் அடிப்பரப்பில் அயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் காணப்படுவது குறித்து விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். காலநிலை மாற்றங்களுக்கான பெரிய புதிர் இதன்மூலம் கண்டுபிடிக்கப்படலாம் என்று அவர்கள் நேற்று தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


greenland


கடந்த 2011 ஆம் ஆண்டில் வருடாந்திரப் பனிப்பொழிவைக் கணக்கிடும் விதமாக விஞ்ஞானிகள் கிரீன்லாந்தில் தென்பகுதியில் ஆய்வு நடத்தினர். கடினமான பனிப்பாளத்தில் 10 மீட்டர் ஆழம் வரை துளைத்ததும் திரவநிலையில் நீர்ப்பரப்பு காணப்பட்டதும் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் மற்றொரு இடத்தில் 25 மீட்டர் துளைத்தபோதும் அங்கும் இதேபோல் நீர்ப்பரப்பு காணப்பட்டது.


இதனைத் தொடர்ந்து  கிரீன்லாந்து நிலப்பரப்பின் அடிப்பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது 27,000 சதுர மைல்கள் பரப்பளவிற்கு ஐந்திலிருந்து ஐம்பது மீட்டர் ஆழம் வரை நீர் நிரம்பியுள்ளது கண்டறியப்பட்டது.முந்தைய கோடைக்காலத்தில் உருகிய பனிக்கட்டிகளே இதுபோல் நீர்ப் பரப்பாக மாறியிருக்கக்கூடும் என்று அறிவியல் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.


பனிப்பாளங்களுக்கு அடியில் காணப்படும் பாறைகளின் இடுக்குகளிலும் இதுபோல் தண்ணீர் உறையாமல் சேமிக்கப்பட்டிருந்தது. கிரீன்லாந்தில் காணப்படும் கடுமையான உறைபனிக் காலத்திலும் இந்த நீர்ப்பரப்பு உறையாமல் திரவ நிலையிலேயே காணப்படுவது ஆச்சரியமான விஷயமாகும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவின் தலைவரான ரிக் ஃபோஸ்டர் தெரிவிக்கின்றார். இவர் உடா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார்.


அதிக அளவில் பூமியின் மேற்பரப்பில் பனிப்பொழிவு காணப்பட்டபோதிலும் கோடைக்காலத்தில் பூமியின் அடியிலிருக்கும் நீர் உறையாமல் பாதுகாக்கப்படுவதால் அங்கு தொடர்ந்து நீர்ப்பரப்பு இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மனிதனின் உலக வெப்பமயமாதல் விதிமுறைக்கு உட்படாத இயற்கை சேமிப்பான இந்த நீர்ப்பரப்பு காலநிலை மாற்றங்களுக்கான விடையைத் தெரிவிக்கக்கூடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search