
'தூம்-3' படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவருவதையொட்டி அமீர்கான், அபிஷேக்பச்சன், கத்ரினாகைப், டைரக்டர் விஜய்கிருஷ்ணா ஆச்சார்யா ஆகியோர் நேற்று இரவு சென்னை வந்தார்கள். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்கள்.
அப்போது அமீர்கானிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றிற்கு அமீர்கான் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
பதில்:-நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். அவர் நடித்த உத்தர்தக்ஷன், கிராப்தார் ஆகிய படங்களை பார்த்ததில் இருந்து அவருடைய ரசிகனாகிவிட்டேன். தமிழில் எனக்குப்பிடித்த நடிகர் ரஜினிகாந்த் முதன்முதலாக அவருடன் ஆதங்கி ஆதங் என்ற படத்தில் நான் சேர்ந்து நடித்தேன். அவர் மிகப்பெரிய நடிகர் அதனால் எனக்கு அவருடன் சேர்ந்து நடிப்பதற்கு பதற்றமாக இருந்தது. அவர் என்னை தைரியப்படுத்தி நடிக்க வைத்தார். அவருடைய எளிமையும், மனித நேயமும் என்னை கவர்ந்தது. எனக்கு அவர் மீது மரியாதை அதிகரித்தது. அவருடைய நேரம் தவறாமை என்னை ஆச்சரியப்படுத்தியது.
கேள்வி:-தமிழ் படங்களை 'ரீமேக்' செய்வதாக இருந்தால் எந்த படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?
பதில்:-சூர்யா நடித்த கஜினி படத்தை பார்த்துவிட்டு நான் அசந்து போனேன். என்னால் இந்த அளவு நடிக்க முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. வில்லன்களை துரத்தி அடித்து பழி வாங்குவது போல் இதற்கு முன்பு நான் நடித்ததில்லை. அதனால் சூர்யாவுடன் மொபைலில் பேசினேன். என்னால் உங்கள் அளவுக்கு நடிக்க முடியுமா? என்று அவரிடம் கேட்டேன். நிச்சயமாக உங்களால் நடிக்க முடியும் என்று அவர் தைரியம் சொன்னார். சூர்யா கொடுத்த தைரியத்தில்தான் அந்த படத்தில் நான் நடித்தேன். மற்ற தமிழ் ரீமேக் படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை.
கேள்வி:- கே.பாலசந்தரின் உன்னால் முடியும் தம்பி என்ற படத்தின் ரீமேக்கில் நீங்கள் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானதே?
பதில்:- 'தாரே ஜமீன்பர்' படத்தை நான் டைரக்டு செய்ததற்காக சென்னையில் எனக்கு ஒரு விருது வழங்கினார்கள். அந்த விருதை டைரக்டர் கே.பாலசந்தர் வழங்கினார். அப்போது அவர் பேசும்போது என் நடிப்பை மிகவும் புகழ்ந்து பாராட்டினார். எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. தேம்பி அழுதேன். சமீபத்தில் சர்வதேச படவிழாவிற்காக நான் சென்னை வந்த போது கே.பாலசந்தரை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது அவர் தூம்-3 படத்தை பற்றி கேட்டு எனக்கு வாழ்த்து சொன்னார். அவருடைய 'உன்னால் முடியும் தம்பி' படத்தின் ரீமேக்கில் நான் நடிப்பதாக வந்த தகவல் வெறும் வதந்திதான்.
கேள்வி:- நேரடி தமிழ் படத்தில் நடிப்பீர்களா?
பதில்:- எனக்கு தமிழ் தெரியாததால் தயக்கமாக இருக்கிறது. தமிழ் தெரியாத ஒரு கதாபாத்திரமாக இருந்தால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அமீர்கான் கூறினார்.
கத்ரினாகைப் கூறும்போது, தமிழில் நான் பார்த்து ரசித்த படம் பிதாமகன். அந்த படம் பார்த்ததில் இருந்து விக்ரம் எனது நண்பராகிவிட்டார். என் தாயார் 7 வருடங்களாக சென்னையில் தான் வசித்தார். இப்போது மதுரையில் வசித்து வருகிறார் என்றார்.அபிஷேக்பச்சன் கூறும்போது, 'தமிழ் படங்களில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். மறைந்த டைரக்டர் ஜீவா, ரேவதி, ராம்கோபால்வர்மா, மணிரத்னம் போன்ற தென் இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் மிகத்திறமையானவர்கள் என்றார்.
0 comments:
Post a Comment