Thursday, October 31, 2013

நேற்று மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது அஜித் நடித்த ஆரம்பம் படம். நள்ளிரவில் இருந்தே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிய ஆரம்பித்துவிட்டார்கள். அஜித் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம், பட்டாசு, வானவேடிக்கையுடன் துவங்கியது ஆரம்பம் படத்தின் முதல்நாள் முதல் காட்சி. படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கைத்தட்டி விசிலடித்து ஆட்டம் போட்டு ஆரம்பத்தை ரசித்துப் பார்க்கிறார்கள் ரசிகர்கள்.இது ஒருபக்கம் இருக்க இன்று பேஸ்புக்கில் ஒரு செய்தி படம் கண்ணில் பட்டது. அதாவது ஆரம்பம் பார்த்த அஜித் ரசிகர் தற்கொலை என்பதுதான் அந்த செய்தி படம். மேலும் அதில் ஆரம்பம் படம் தோல்வி அடைந்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை என்றும் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. பொய்யான செய்திப் படங்களை இப்படி உருவாக்கி வெளியிடுகிறார்களே என்பதுதான் அதியாக காரணம்.


 ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்று பட்டுக்கோட்டையார் அன்றே பாடிவைத்தார். ஆனால் ஆள் வளருகிற அளவுக்கு இன்று அறிவு வளராமல் போய்விடுகிறது. அதனால்தான் அறிவியலை பயன்படுத்தி இது போன்ற வேலைகளை எல்லாம் இவர்களால் பார்க்க முடிகிறது. போட்டோஷாப்பை பயன்படுத்தி இந்த படத்தில் வரும் செய்திகளை உருவாக்கியிருக்கிறார்கள். என்னே ஒரு கீழ்த்தரமான புத்தி. இதன் மூலம் இவர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன?


 குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போன்று இன்று சிலரது கையில் சிக்கிக் கொண்ட பேஸ்புக்கால் இது போன்ற பொய்யான செய்திகள் உலகம் முழுவதும் எளிதில் பரவிவிடுகின்றன. இதை திட்டமிட்டு சில விஷமிகள் உருவாக்குகிறார்கள் என்றால் இதை பகிர்பவர்களாவது கொஞ்சம் யோசிக்க வேண்டும் அல்லவா? இந்த செய்தி உண்மைதானா என்று யோசித்துப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் இது போன்ற பொய்ப் பிரச்சார படங்கள் பேஸ்புக்கில் சாதாரண மனிதர்களால் எளிதில் பகிரப்பட்டு விரைவில் நிறைய பேரை சென்றடைந்து விடுகின்றன. இது போன்ற கீழ்த்தரமான புத்தி உடையவர்கள் என்ன சொன்னாலும் திருந்தப் போவதில்லை. அவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு. எனினும், பேஸ்புக் போன்றவற்றில் வரும் இது போன்ற செய்தி, படங்களை உண்மை தன்மை அறிந்து பகிரும் பழக்கத்தை அனைவரும் கடைபிடித்தால் பொய் பிரச்சார செய்திகள், படங்கள் நிறையபேரை சென்றடைவதை நம்மால் முடிந்த அளவுக்கு தடுக்க முடியும்.

Posted by V4Tamil .com on 10:10 PM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search