ரஜினியை நான் ரொம்ப நேசிக்கிற ஆள். அவரை தப்பா பேசிட்டதா யாரோ இன்டர்நெட்ல வதந்தி பரப்பி என்னை ரஜினி ரசிகர்களின் விரோதியாக்கப் பார்க்கிறார்கள் என்றார் நடிகர் பரோட்டா சூரி.
இவன் வேற மாதிரி என்ற படத்தைப் பாராட்டி சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு அறிக்கை கொடுத்திருந்தார். இதை படக்குழுவினர், விளம்பரமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அடுத்த நாள் பரோட்டா சூரியின் ட்விட்டர் (Im_Actor_Soori) பக்கத்தில் ரஜினி கடிதம் கொடுத்ததைக் கிண்டலடித்து ஒரு ட்விட் வெளியானது. அதில் பிரபலங்கள் சொல்லிவிட்டார் என்பதற்காக ஒரு படத்தைப் பார்க்காதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த ட்விட்டர் பக்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, உதயநிதி உள்ளிட்ட பல பிரபலங்களும் தொடர்வதால், அது சூரியின் உண்மையான பக்கம்தான் என பலரும் நம்பினர். மீடியாவிலும் இந்த செய்தி வெளியானது. இந்த நிலையில் சூரி தரப்பில், இந்த செய்திக்கு மறுப்பு வெளியானது. அந்த மறுப்பு வெளியான சில மணி நேரங்களில் மீண்டும் அதே ட்விட்டர் பக்கத்தில், 'ரஜினி சொன்னதற்காகவே இவன் வேற மாதிரி படத்தை நான்கு முறை பார்த்தேன்' என்று நக்கலான ட்விட் வெளியானது.
இது மீடியாவில் குழப்பத்தையும், ரஜினி ரசிகர்கள் மத்தியில் கோபத்தையும் உண்டாக்கியது. இதைத் தொடர்ந்துதான் பரோட்டா சூரி போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இதுகுறித்து பரோட்டா சூரியிடம் நாம் கேட்டபோது, "சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினி மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவரது ரசிகன் நான். அவரைப் போய் தவறாகவோ கிண்டலாகவோ பேசுவேனா...இதெல்லாம் யாரோ திட்டமிட்டு செய்யும் வதந்தி சார்," என்றார்.
0 comments:
Post a Comment